சென்னை மற்றும் கோயம்புத்தூரில் செல்லப்பிராணி பூங்காக்கள் அமைக்க தமிழக அரசு முடிவு
சென்னை: பாதுகாப்பான செல்லப்பிராணி பராமரிப்பு மற்றும் விலங்குகளை மனிதாபிமானமாக கையாளுதல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் தனியார் பங்காளித்துவத்தின் மூலம் செல்லப்பிராணி பூங்காக்களை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டத்திற்காக அனுபவமுள்ள தனியார் அறக்கட்டளைகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் விலங்கு நல அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படும் அமைப்புகள் தங்களது சொந்த நிதியில் பூங்காவை மேம்படுத்தி பராமரிக்க அனுமதிக்கப்படும். செல்லப்பிராணிகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பசுமை புல்வெளிகள், உணவு மற்றும் பொருட்கள் விற்பனை கடைகள், பயிற்சி உபகரணங்கள் மற்றும் விதிமுறைகள் கொண்ட கையேடுகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் மற்றும் வழிகாட்டுதல்களை www.tnawb.tn.gov.in இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இம்மாதம் 26ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும்.

